Kumbakonam POCSO Case 
க்ரைம்

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலன்.. “உடல் முழுவதும் இருந்த காயங்கள்” - அதிர்ச்சியில் போலீஸ்!

பைனான்ஸ் நிறுவனரான யோகராஜுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே தொழில் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது...

Mahalakshmi Somasundaram

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதுடைய யோகராஜ். இவருக்கு தற்போது வரை திருமணமாகாத நிலையில் பைனான்ஸ் நிறுவனம் மூலம் சுயஉதவிக் குழுக்களை நடத்தி வருகிறார். இவரது குழுவில் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது சியாமளா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர் வசூல் முகவராகப் பணியாற்றி வந்துள்ளார். சியாமளவிற்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

கணவர் சமீபத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில், பைனான்ஸ் நிறுவனரான யோகராஜுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே தொழில் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் அந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவ்வப்போது யோகராஜ் சியாமளா வீடிற்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

வழக்கம் போல கடந்த (அக் 26) -ஆம் தேதி யோகராஜ், அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 3 வயது பெண் குழந்தைக்குப் பல்வேறு வகைகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குழந்தையின் உடல் முழுவதும் கடித்ததால் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, குழந்தையின் உடலில் இருந்த காயங்களைக் கவனித்த சியாமளாவின் தாய் இது குறித்து அவரது மகளிடம் கேட்ட போது அவர் சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

எனவே இது குறித்து சியாமளாவின் தாய் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், ஒன்றிணைந்து நேற்று(அக் 29) ஆம் தேதி காலை அவரது பாட்டியின் உதவியுடன் குழந்தையை நாச்சியார்கோவில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் குழந்தையிடம் விசாரணை நடத்தி, அவரது உடம்பில் இருந்த காயத்தை கவனித்து பாலியல் வன்கொடுமை நடத்தை மருத்துவரின் உதவியுடன் உறுதி செய்தனர்.

எனவே இது குறித்து போலீசார் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். அப்போது, யோகராஜ் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பாலியல் ரீதியாக அணுகி வந்ததாகவும், சமீபத்தில் அந்தப் பெண் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரது 3 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவத்துக்கு குழந்தையின் தாயும் உடந்தையாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நாச்சியார்கோவில் போலீசார், யோகராஜ் மற்றும் குழந்தையின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 3 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சியாமளாவின் இரு குழந்தைகளையும் மீட்டு அவரது பாட்டியிடம் ஒப்படைத்த நிலையில் வெளிநாட்டில் உள்ள அவர்களது தந்தைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.