திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற திருவள்ளூரில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வழக்கறிஞர் டார்ஜன் என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.
இதையடுத்து விவாகரத்து குறித்து விவரமாக பேச வழக்கறிஞர் டார்ஜன் தனது வீட்டிற்கு நேரில் வருமாறு அழைத்திருக்கிறார். டார்ஜனின் அழைப்பின் பேரில் அந்த பெண்ணும் அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த பெண்ணிடம் பேசிய வழக்கறிஞர் டார்ஜன், பெண்ணின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு வழக்கை தானே கட்டணம் ஏதும் வாங்காமலே நடத்துவதாகக் கூறியிருக்கிறார். டார்ஜனின் பேச்சை நம்பி அந்த பெண்ணும் அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர், சில நாள்களுக்குப் பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய வழக்கறிஞர் டார்ஜன், விவாகரத்து தொடர்பாக ஆவணங்களை பெற வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் பெண்ணின் வீட்டுக் கதவைத் தட்டிய வழக்கறிஞரை அழைத்து உட்கார வைத்து விட்டு தேவையான ஆவணங்களைக் காண்பித்திருக்கிறார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
உடன் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட வழக்கறிஞர் டார்ஜன், தான் ஏற்கனவே மயக்க மருந்து கலக்கி வைத்திருந்த ஜூஸை அந்த பெண்ணிற்குக் கொடுத்திருக்கிறார். அந்த பெண்ணும் அதை வாங்கி குடிக்கவே, அடுத்த சில நிமிடங்களில் மயக்கமடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து வழக்கறிஞர் டார்ஜன், மயக்கமடைந்த பெண்ணை நிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்து விட்டு, அத்துமீறியிருக்கிறார். பின்னர், மயக்கம் தெளிந்து வழக்கறிஞர் தன்னிடம் அத்துமீறியதை கண்டு அதிர்சியடைந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
பின்னர் இதுதொடர்பாக வெளியே கூறினால் உனது ஆபாச படங்களை இணையத்தில் விட்டு விடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார் டார்ஜன். தொடர்ந்து அப்பெண்ணிட 3 லட்சம் ரூபாய் வரை ரொக்கத்தை பெற்று மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாது நின்ற அப்பெண் வேறு வழியின்றி டார்ஜன் குறித்து போலீசார் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்க்கொண்ட போலீசார், வழக்கறிஞர் டார்ஜினை தேடிய போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. பின்னர் கொடைக்கானலில் இருந்ததை அறிந்த போலீசார் அவரை கைது செய்து நேற்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.