க்ரைம்

“20 வருட காதல் கதை” - மதம் மாற ரெடியாக இருந்த காதலன்.. காதலி வீட்டில் தற்கொலை செய்தது ஏன்?

தனுஷை பிரிந்து இருக்க முடியாத சபீனா முதுகலை அறிவியல் படிக்க கோவைக்கு சென்றுள்ளார்

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். துரைசாமியின் மகன் தனுஷ் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து முடித்த நிலையில் அங்கேயே வேலையும் கிடைத்துள்ளது. எனவே துரைசாமி தனது குடும்பத்துடன் கோவைக்கு இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

தனுஷ் பள்ளி படிக்கும் பருவத்தில் இருந்தே அதே பகுதியை சேர்ந்த சபீனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் கோவைக்கு சென்ற தனுஷை பிரிந்து இருக்க முடியாத சபீனா முதுகலை அறிவியல் படிக்க கோவைக்கு சென்றுள்ளார். பிறகு இருவரும் சேர்ந்து வெளியில் செல்வது நண்பர்களின் விழாக்களுக்கு செல்வது என காதலித்து வந்துள்ளனர்.

இதனை ஒரு கட்டத்தில் அறிந்த சபீனாவின் தந்தை கோவைக்கு சென்று படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சபீனாவை குலசேகரத்திற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் தனுஷுடனான காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளார். பின்னர் அவசர அவசரமாக சபீனாவிற்கு திருமண ஏற்பாடுகளை செய்ய தொடங்கியுள்ளனர். இதை அறிந்த தனுஷ் தனது காதல் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார்.

சபீனாவின் வீட்டிற்கு முறையே பெற்றோர்களை அழைத்து சென்று சபீனாவை பெண் கேட்டுள்ளார். ஆனால் தனுஷையும் அவரது குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி பேசிய சபீனாவின் தந்தை வேறு மதத்தில் எனது மகளை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என கூறியுள்ளார். அதற்கு தனுஷின் தந்தை “எதோ காதலித்து விட்டார்கள் மதம் தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் என் மகன் உங்கள் மதத்திற்கு மாறிவிடுவான் இருவரையும் சேர்த்து வையுங்கள்” என கூறியுள்ளார்.

எந்தவித சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளாத சபீனாவின் தந்தை “மீண்டும் உங்கள் மகன் என் மகளுடன் பேசினால் கொன்று விடுவேன்” என கூறி எச்சரித்துள்ளார். மேலும் சபீனாவிடமிருந்த போனை பறித்த அவரது தந்தை சபீனாவை வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்த தனுஷ் இந்த செய்தியை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டு தனது காதலிக்கு சொல்ல குலசேகரம் சென்றுள்ளார்.

மறுநாள் சபீனாவின் உறவினர் ஒருவர் துரைசாமிக்கு போன் செய்து “உங்கள் மகன் சபீனாவின் வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த துரைசாமி உடனடியாக குலசேகரம் கிளம்பி சென்றுள்ளார். அதே சமயம் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தனுஷின் தந்தை கொடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தனுஷின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். வேலை கிடைத்ததை காதலிக்கு சொல்ல சென்ற மகன் மர்மமான முறையில் இறந்தது தனுஷின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.