பெரம்பலூர் மாவட்டம், அம்மா பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான ரவி. இவர் பெரம்பலூர் நகரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ள நிலையில் தற்போது பெரம்பலூர் எடத் தெருவில் உள்ள மூன்றாவது மனைவி சுவேதா வீட்டில் தங்கி ரவி ஆட்டோ ஓட்டி வருகிறார். சுவேதாவின் தங்கை மஞ்சுளா கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறார், பல்வேறு வரன்கள் மஞ்சுளாவை பெண் கேட்டு வந்த நிலையில் ஒரு வரனுக்கு மஞ்சுளாவை பேச சுவேதா முடிவு செய்துள்ளார்.
இது குறித்து சுவேதா மஞ்சுளாவிடம் பேசிய போது “தற்போது எனக்கு திருமண வேண்டாம் நான் படிக்க வேண்டும்” என மஞ்சுளா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு பிறகு மஞ்சுளாவை படிக்க வைக்க உறுதி அளித்த நிலையில் மீண்டும் சுவேதா திருமணம் குறித்து மஞ்சுளாவிடம் பேசியுள்ளார். அப்போது மஞ்சுளா தன்னுடன் படிக்கும் விக்கி என்பவரை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் சுவேதாவிற்கும் மஞ்சுளாவிற்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ரவி மற்றும் சுவேதா நேரடியாக விக்கியிடம் சென்று “எனது மச்சினிச்சியிடம் பேசுவதை நிறுத்தி விடு இனிமேல் பேசுறது பாத்தா கொலை பண்ணிடுவேன்” என மிரட்டியுள்ளனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த விக்கி ரவி மிரட்டியதை பற்றி தனது நண்பர்களிடம் கூறியுள்ளார் பின்னர் விக்கி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ரவியை தக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ரவி பெரம்பலூர் கடைவீதி பகுதியில் சிவன் கோயில் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை அழைப்பதற்காக தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளி அருகே ஆட்டோவை வழிமறித்த விக்கி மற்றும் அவரது நண்பர்கள் ரவியை, தலை கழுத்து என பல பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அப்பகுதியில் குழந்தைகளை அழைப்பதற்கு வந்த பெற்றோர்கள் தலை தெறிக்க இதை பார்த்து ஓடினர்.
இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் ரவி ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவிகளை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தப்பி ஓடிய விக்கி மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் நகரில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி சாலையில் ஆட்டோவை வழிமறித்து ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக மர்ம கும்பல் ஒன்று வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.