க்ரைம்

மதனின் பேச்சு சரியில்லை.. அவரையெல்லாம் வெளியே விட முடியாது... நீதிபதிகள் அதிரடி

மதனின் பேச்சுக்கள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது.. அவரை ஏன் வெளியே விடவேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு மூலம் மிகவும் பிரபலமாக இருந்தவர் பப்ஜி மதன். ஆன்லைன் விளையாட்டின் போது சிறுவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்ட போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட பப்ஜி மதனை கைது செய்தனர். தற்போது சென்னை, புழல் சிறையில் பப்ஜி மதன் அடைக்கப்பட்டுள்ளார். 

பப்ஜி மதன் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக்கூறி, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்...

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பாப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென மதன் மனைவி கிருத்திகா மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.. அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், மதனின் பேச்சுக்கள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளதாகவும், அவரை ஏன் வெளியில் விட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.. மேலும் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனு வரும் 22ஆம் தேதி வர உள்ள நிலையில், அதை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என மதன் மனைவி கிருத்திகா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.