க்ரைம்

“கண்டிக்க வேண்டிய காவலர் செய்த கொடுமை” - தங்கையிடம் பேசிய திடுக்கிட வைக்கும் ஆடியோ.. தலை தூக்கும் வரதட்சணை பிரச்சனைகள்!

பூபாலன் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார் முகம் மற்றும் கை கால்களில் கடுமையான காயம் ஏற்பட்ட ஆசிரியை

Mahalakshmi Somasundaram

மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி பகுதியை சேர்ந்தவர் காவலர் பூபாலன். இவர் அதே பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பூபாலனும் அவரது தந்தையான சாத்தூர் வட்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட பணம் நகையை பெண் விட்டார் கொடுத்துள்ளனர்.

இருப்பினும் ஒரு வீடு கட்டித்தர சொல்லியும் பல லட்சம் பணத்தை ரொக்கமாக கேட்டு தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளனர். தற்போது இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் ஆன நிலையி தொடர்ந்து பூபாலன் தனது மனைவியை சித்திரவதை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பூபாலன் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கடுமையாக தாக்கியுள்ளார். முகம் மற்றும் கை கால்களில் கடுமையான காயம் ஏற்பட்ட ஆசிரியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை அறிந்த ஆசிரியரின் பெற்றோர்கள் தங்கள் மகளை வரதட்சணை கேட்டு கொடுமையாக தாக்கிய பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில் குமார், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்த மதுரை மாவட்ட காவல் துறையினர் தலைமறைவாக உள்ள நால்வரையும் கைது செய்ய எஸ்.பி. உத்தரவின் பேரில், ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. பாலசுந்தரம் தலைமையில், ஆய்வாளர் சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் கார்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இவர்களைத் தேடி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கணவர் பூபாலன் மற்றும் மாமனார் செந்தில் குமாரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாமியார் விஜயா மற்றும் நாத்தனார் அனிதாவையும் தேடி வருகின்றனர். பூபாலனை கைது செய்ததை தொடர்ந்து அவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியது குறித்து தனது தங்கையிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் “மூஞ்ச நல்லா புடிச்சு பிராண்டி விட்டுட்டான், கழுத்தை பிடித்து நெம்பி விட்டுட்டா, கால்களை இறுக்கி புடிச்சதுல துடிச்சு போய்ட்டா” என பேசியுள்ளார்.

வரதட்சணை கேட்டு மனைவியை கணவன் துன்புறுத்தியதும், வரதட்சணை கேட்பது தவறு என மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய காவலர்களே இவ்வாறு செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து வரதட்சணை கொடுமைகள் நடந்தது கொண்டிருப்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.