Madurai Mother Son Murder 
க்ரைம்

“மதுபோதையில் தாயிடம் அத்துமீற முயன்ற மகன்” - இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை.. சடலத்தை 3 மாதமாக மறைத்து வைத்த தாய்!

வீட்டின் வாசலில் படிந்திருந்த ரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்..

Mahalakshmi Somasundaram

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி 50 வயதுடைய அய்யம்மாள். கணேசன் உயிரிழந்த நிலையில், அய்யம்மாள் தனது மகன் ராஜாவுடன் வசித்து வந்துள்ளார். ராஜாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது மனைவியைப் பிரிந்த நிலையில், அவர் தாயுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அய்யம்மாள் நேற்று முன்தினம் (ஆக 26) கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, தனது மகனை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், இதுகுறித்து கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் அய்யம்மாளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடம் அய்யம்மாள் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு சுமார் 11.30 மணியளவில் தனது மகன் ராஜா மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாகவும், தன்னை ஆபாசமாக பேசி தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் தவறாக நடக்க ராஜா முயன்றதாகவும், தொடர்ந்து தன்னை தாக்க முயன்றதால் ஆத்திரமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த ராஜாவை கீழே தள்ளிவிட்டு, அங்கு கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து அவரது தலை, கை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் தாக்கியதாகவும், இதில் ராஜா உயிரிழந்ததாகவும் அய்யம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மகனின் உடலை வீட்டின் இடதுபுற வாசல் அருகே பாத்ரூம் கட்டுவதற்காக ஏற்கெனவே தோண்டப்பட்டிருந்த குழிக்குள் புதைத்து, அதன் மீது விறகுக் கட்டைகளை வைத்து மறைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வீட்டின் வாசலில் படிந்திருந்த ரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையே, மகன் காணாமல் போனது குறித்து அய்யம்மாள் கடந்த சில நாட்களாக அக்கம் பக்கத்தினரிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மகனை கொலை செய்து புதைத்துவிட்டதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் அய்யம்மாளை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதனும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையே, வீட்டின் அருகே புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ராஜாவின் உடல் இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் போலீசாரின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரும். மகன் தன்னை தாக்கியதாகவும், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படும் நிலையில், அவரை அடித்துக் கொலை செய்து உடலை வீட்டின் அருகே புதைத்து மூன்று மாதங்களாக மறைத்து வைத்ததாக தாய் அளித்துள்ள வாக்குமூலம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்