க்ரைம்

திருமண தடை நீங்க, 2 லட்ச ரூபாய் பரிகாரம்... பலனளிக்காததால் சாமியாருக்கு நேர்ந்த பரிதாபம்!!

Malaimurasu Seithigal TV

பரிகார பூஜை செய்தும் திருமணம் நடக்காததால் விரக்தியடைந்த இளைஞர், சாமியாரை விரட்டி விரட்டி குத்திக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஒதியத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் திருமால் (31). திருமாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இந்த வருடத்தில் எப்படியாவது ஒரு பெண்ணின் கரத்தை பிடிக்க வேண்டும், குடும்ப வாழ்க்கையில் இணைய வேண்டும் என காத்திருந்த திருமாலுக்கு சாமியார் ஒருவர் வழிகாட்டுவதற்கு தயாரானார். 

திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று வழிபட்டு திரும்பும் வழியில், அங்கு வசித்து வந்த சரவணன் என்கிற சாமியாரை அணுகியுள்ளார் திருமால். அப்போது திருமணத் தடை காரணமாகவே இதுவரை நல்ல காரியங்கள் நடக்கவில்லை என்றும், சிறப்பு பூஜைகள் செய்தால் எல்லாமே சரியாகி விடும் என்றும் கூறியிருக்கிறார் சாமியார் சரவணன். 

இதையடுத்து திருமாலிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் வாங்கி சிறப்பு பூஜை செய்து, திருமணம் நடக்கும் என நம்பிக்கை கொடுத்து அனுப்பியுள்ளார் சரவணன். ஆனால், பரிகாரம் செய்த பின்னரும் திருமாலின் கழுத்தில் மாலை விழவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த திருமால், பூஜையினால் பலனில்லை என்றதோடு கொடுத்த 2 லட்ச ரூபாயை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பூஜைக்காக வழங்கிய பணத்தை திருப்பி தர முடியாது என, சாமியார் சரவணன் மறுத்ததையடுத்து, அவரை நேரில் வரவழைத்தார் திருமால். 

செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தில் உள்ள காளி கோயிலுக்கு சாமியாரை அழைத்த திருமால் பரிகாரம் பண்ணியாச்சு. கல்யாணம் என்னாச்சு என கேட்டு வாக்குவாதத்தில் இறங்கினார். அப்போது இருவருக்கும் இடையே எழுந்த தகராறில் கோபமடைந்த திருமால் கத்தியை எடுத்து சாமியார் சரவணனின் வயிற்றில் பலமாக குத்தினார். கத்தியால் குத்தியதில், சாமியார் சரவணனின் குடல் வெளியே வந்துள்ளது.

இதையடுத்து உயிருக்கு போராடிய சாமியாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து அறிந்த விழுப்புரம் போலீசார் தனிப்படை அமைத்து திருமாலை சத்தியமங்கலத்தில் வைத்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.