சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-களில் நூதன முறையில் 48 லட்சம் ரூபாய் அளவிற்கு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், சின்மயா நகர், வடபழனி, கீழ்ப்பாக்கம், பெரியமேடு ஆகிய 8 இடங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொள்ளையர்கள் ஒரே பாணியில் பல மாவட்டங்களிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏடிஎம்களில் பணம் கொள்ளையடித்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்த நிலையில், அவர்களை பிடிக்க தனிப்படையினர் அங்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில், எடிஎம் கொள்ளை தொடர்பாக அரியானாவில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இக்கொள்ளையில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.