க்ரைம்

காதலியை கொலை செய்ய முயன்றவருக்கு சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்...!

Tamil Selvi Selvakumar

பிரிந்து சென்ற காதலியை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற காதலனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், தன்னுடன் பள்ளியில் படித்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த அப்பெண் கோவையில் வேலை பார்த்து வந்த நிலையில், தன் சொல்படி நடக்க வேண்டும் எனக் கூறி, அப்பெண்ணின் மீது ராஜேஷ் ஆளுமையை செலுத்த முயற்சித்துள்ளார்.

இதனால் தன் காதலை முறித்துக் கொள்வதாக அப்பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காதலன் ராஜேஷ், கடந்த 2018ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த காதலியை கத்தியால் குத்திவிட்டு, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

இதில் அப்பெண் படுகாயமடைந்ததால் ராஜேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த அண்ணாநகர் போலீசார், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.