க்ரைம்

“காதலுக்கு எதிர்ப்பு.. சட்டக்கல்லூரி மாணவர் சரமாரியாக வெட்டி கொலை” - மானாமதுரையில் அதிர்ச்சி!

சம்பவங்களைத் தடுக்க காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த சின்னபுதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவர் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது. சிவபாலனின் அண்ணனுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசனின் மகளை திருமணம் செய்து வைத்திருந்ததாகவும், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், முருகேசனின் இளைய மகளை சிவபாலன் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், இது தொடர்பாக அடிக்கடி பெண் கேட்டு முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முருகேசன் மறுத்ததாக தெரிகிறது. இந்த சூழலில் இன்று வழக்கம் போல் முருகேசனின் வீட்டிற்கு சென்ற சிவபாலன், அவரது இளைய மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, முருகேசனின் மகன் அருண்ராஜை சிவபாலன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற முருகேசனின் கட்டைவிரல் துண்டானதுடன், அருண்ராஜுக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சிவபாலனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிவபாலனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிவபாலனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் முருகேசன் மற்றும் அவரது மகன் அருண்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காதல் மற்றும் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் சின்னபுதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்