உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்லியாவில் ரயில் தண்டவாளத்தில் 28 வயதான காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சமயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து, அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
சந்தீப் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த உதவி ஆய்வாளர், பல்லியாவில் உள்ள சித்பர்ஹாகான் காவல் நிலையத்தில் பணியாற்றியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (நவ 14) இரவு 7 மணி முதல் 8 மணிக்குள், ரயில் தண்டவாளத்தில் படுத்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அடுத்த நிலையத்தில் உள்ள ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தாக்கல் செய்த MRO அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், அருகில் ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர். காவல்துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து, இறந்தவர் சந்த் கபீர் நகரைச் சேர்ந்த குமார் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் கடந்த 11 மாதங்களாக சித்பர்ஹாகான் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. சிக்கந்தர்பூர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் குமார் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் அவரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகவும், மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பெண் மற்றொரு காவல்துறை அதிகாரி மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்திருந்தார் என்றும் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இறந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் பல உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர் சிக்கந்தர்பூரைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்து வந்துள்ளார்.
காவல்துறையினர் சார்பில் இருந்து, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையிலும், தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரோலி கோண்ட் என்ற பெண் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பழத்தோட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக பல்லியா காவல் கண்காணிப்பாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ 15) தெரிவித்துள்ளார். மேலும், சந்த் கபீர் நகரைச் சேர்ந்த குமாருக்குத் திருமணமாகி, ஆறு மாதக் குழந்தை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பக்ரி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் பண்டிகை ஏற்பாடுகள் காரணமாக தனது பழைய பணியிடத்திலிருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.