abinesh and kavipriya  
க்ரைம்

“3 வயது குழந்தையை சுவரில் வீசி அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன்” - கழிவறையில் வழுக்கி விழுந்ததாக நாடகம்.. சிசிடிவியால் வெளியான உண்மை!

தனது 3 வயது மகன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்தகாயமடைந்ததாக கூறி...

Mahalakshmi Somasundaram

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆலவேலி கிராமம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 31 வயதுடைய கனிவண்ணன். கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கவிப்பிரியா என்பவரை காதலித்து கடந்த ஆறு வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கவிப்பிரியாவுக்கு மயிலாடுதுறை அருகே அரிவேளூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய அபினேஷ் என்பவருடன் திருமணத்திற்கு முன்பே பழக்கம் இருந்ததுள்ளது. தனியார் நுண்கடன் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய அபினேஷ், மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் கடன் வசூலிக்கச் சென்றபோது கவிப்பிரியாவுடன் நட்பு ஏற்பட்டதாகவும், திருமணத்திற்குப் பிறகு அந்த நட்பு கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கணவர் கனிவண்ணனுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, கணவன்,மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கவிப்பிரியா தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரை பிரிந்து, ஆக்கூர் பாரதி வீதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். எனவே அடிக்கடி கள்ளக்காதலன் அபினேஷ் கவிப்ரியாவீட்டிற்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த (ஜூன் 25)ஆம் தேதி கவிப்பிரியா தனது 3 வயது மகன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்ததாக கூறி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் குழந்தை மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

இதனை அறிந்து மருத்துவமனைக்கு சென்ற கனிவண்ணன் குழந்தை காயமடைந்த விதத்தில் சந்தேகம் அடைந்து, தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இதற்கிடையே, கடந்த (ஜூன் 29) ஆம் தேதி சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுவன் உயிரிழந்தார். எனவே இந்த வழக்கில் கவிப்பிரியா மற்றும் அபினேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவம் நடந்த நேரத்தில் தான் ஊரிலேயே இல்லை, வெளியூரில் இருந்ததாக அபினேஷ் தெரிவித்தார்.

ஆனால், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அபினேஷ் கவிப்பிரியா வீட்டில் இருந்தது உறுதியானது. இதையடுத்து நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் வெளியான தகவலின்படி, சம்பவத்தன்று கவிப்பிரியா வீட்டிற்கு வெளியே தண்ணீர் எடுக்கச் சென்றிருந்தபோது, 3 வயது குழந்தை தொடர்ந்து அழுது அடம்பிடித்து உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ், குழந்தையை தூக்கி தரையில் வீசி, பின்னர் சுவரில் பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, காதலனுடன் சேர்ந்து கவிப்பிரியா நடந்த கொடூரத்தை மறைக்க, "குழந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயமடைந்தான்" என்று நாடகமாடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, கவிப்பிரியா மற்றும் அபினேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கடந்த (ஜூலை 04) ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் கவிப்பிரியா திருச்சி மகளிர் சிறையிலும், அபினேஷ் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். தாயின் கள்ளக்காதலன் அழுத 3 வயது குழந்தையை ஆத்திரத்தில் சுவரில் வீசி கொலை செய்துவிட்டு, விபத்து என நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்