Headmaster Controversy Student Suicide Attempt 
க்ரைம்

“தலைமை ஆசிரியரை பார்க்கவே பயமாக இருக்கு” - மாணவிகளை குறிவைத்து டார்ச்சர்? மண்ணெண்ணெய் குடித்த 12ஆம் வகுப்பு மாணவி!

சில குறிப்பிட்ட மாணவிகளை மட்டும் டார்கெட் செய்து வந்ததாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திரகுமார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கல்வித்துறை சார்பில் விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்குமாறு மாணவ, மாணவிகளை அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சம்பவத்திற்கு முன்தினம் மாணவியின் வீட்டிற்கு சென்று ஏதோ கடிதம் எழுதி வாங்கியதாக சொல்லப்படுகிறது. தலைமையாசிரியை சாதகமாக மாணவிகள் பேசாததால் இந்திரகுமார் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக சில குறிப்பிட்ட மாணவிகளை மட்டும் டார்கெட் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தலைமை ஆசிரியர் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி, நேற்று காலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகே அவரது உடல்நிலை குறித்து உறுதியாக தெரிவிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, தலைமை ஆசிரியரை பார்க்கவே தனக்கு பயமாக இருப்பதாகவும், பள்ளிக்கு செல்வதற்கும் அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் விரிவாக கருத்து தெரிவிக்க மறுத்த அவர், தற்போது மாணவியின் உடல்நிலையை பாதுகாப்பதே முதன்மையானது என்றும், அவர் குணமடைந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான பிரச்னை தொடர்பாக மாணவிகளை விளக்கம் அளிக்க வற்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், 12ஆம் வகுப்பு மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கீழப்பெரும்பள்ளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்