Robbery and harassment Case 
க்ரைம்

“நண்பரை அடித்துப் போட்டு.. பெண்ணை சீரழித்த கும்பல்” - அதிகாலை வாகனத்தில் சென்றவருக்கு நடந்த கொடூரம்.. போலீஸ் அலட்சியமா?

இரண்டு செல்போன்கள் மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை பறித்து பின்னர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை ...

Mahalakshmi Somasundaram

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழனிவாசல் பகுதியில், அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மற்றும் அவரது நண்பரை மதுபோதையில் இருந்த கும்பல் வழிமறித்து தாக்கி, நகை மற்றும் செல்போன்களை பறித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். பின்னர், மயிலாடுதுறையில் இருந்து தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கழனிவாசல் வழியாக அதிகாலை சுமார் 4.30 மணியளவில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அப்பகுதியில் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் ஒரு கும்பல், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரையும் வழிமறித்துள்ளனர். தொடர்ந்து, அவர்களை அருகிலிருந்த வாய்க்கால் மதகுக்கு கீழ் உள்ள மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரையும் அடித்து துன்புறுத்திய அந்த கும்பல், அந்தப் பெண் அணிந்திருந்த தங்க நகைகள், இரண்டு செல்போன்கள் மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை பறித்து பின்னர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அந்தப் பெண்ணை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை போலீசார் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு முன்பாக, இதே கும்பலைச் சேர்ந்தவர்கள் மங்கைநல்லூர் கடைவீதியில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகவும், அதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அந்த கும்பலின் நடவடிக்கைகள் குறித்து தகவல் இருந்தும் போலீசார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததே இதுபோன்ற சம்பவத்திற்கு காரணமாக அமைந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இரண்டு சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்