க்ரைம்

மருத்துவ கல்லூரி முறைகேடு...! எடப்பாடி பழனிச்சாமி மீது விசாரணை நடத்த அரசு அனுமதி...!! 

Malaimurasu Seithigal TV

அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை ஒட்டி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க அரசு அனுமதி வழங்கி இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்  திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன.

திருவாரூரை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதில் கட்டிடங்களை கட்டுவதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பெரும் தொகையை கையாடல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். 55 கோடி வரை பணம் கையாடல் செய்யப் பட்டிருக்கலாம் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க அரசு அனுமதி வழங்கி இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.