க்ரைம்

தகாத உறவில் பிறந்த பெண் குழந்தை... தாயே குழந்தையை கொன்ற கொடூரம் அம்பலம்...

தஞ்சாவூரில், தகாத உறவில் பிறந்த பெண் குழந்தையை தாயே, அரசு மருத்துவமனையின் கழிவறையில் சடலமாக விட்டு சென்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

பரபரப்பு மிகுந்த தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகள், வெளிநபர்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் ஒன்றினை கடந்த சனிக்கிழமை தூய்மை பணியாளர் சுத்தம் செய்துள்ளார். அப்போது அங்கு அழுகிய நிலையில் பெண் சிசுவின் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்த அவர்,  மருத்துவ நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். 

தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், பெண் சிசுவை கொலை செய்தது பூதலூரை சேர்ந்த பிரியதர்சினி என தற்போது தெரிய வந்துள்ளது. 

தகாத உறவால் கருவுற்ற அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கழிவறையிலேயே குழந்தையை பெற்றெடுத்த அவர்,  சிசுவை கொன்று  அங்கு போட்டுவிட்டு சென்றுள்ளார். சிசிடிவி காட்சி மூலம் இதனை உறுதி செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.