ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (38). இவரது மனைவி பாரதி (26). சுரேஷ் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளது. மேலும் அந்த ஆண் குழந்தையும் சமீபத்தில்தான் பிறந்துள்ளது.
ஆனால் பாரதிக்கும் எதிர்வீட்டை சேர்ந்த சுமித்ரா (20) என்ற பெண்ணிற்கும் கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் உறவு இருந்துள்ளது. பாரதிக்கு 3வது குழந்தையான துர்வன் பிறந்தபின் சுமித்ராவுக்கும் பாரதிக்கும் இடையே ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதில் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 4 -ஆம் தேதி சுரேஷ் வீட்டிற்கு வந்தபோது குழந்தை மூச்சு பேச்சில்லாமல் கிடந்துள்ளது. அதுபற்றி மனைவியிடம் கேட்டதற்கு ‘பால் கொடுத்து தூங்க வைத்தேன், இருமல் வந்துவிட்டது’ என சொல்லியுள்ளார். உடனே சுரேஷ் பதறியடித்து குழந்தையை தூக்கிக்கொண்டு, கெலமங்கலம் மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸார், சுரேஷிடம் விசாரணை செய்தனர். உண்மையில் குழந்தை இயற்கையாகத்தான் இறந்தது என நினைத்த சுரேஷும், உடற்கூறாய்வு தேவையில்லை என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களது விவசாயத் தோட்டத்தில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது.
வீட்டுக்கு சென்ற சுரேஷ், பாரதியிடம் மற்றொரு செல்போன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அதனை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த செல்போனில் பாரதியும், சுமித்ராவும் ஓரினச்சேர்க்கையில் இருப்பது போன்ற படங்கள் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது சம்பந்தமாக சுரேஷ் அவரது மனைவி பாரதியிடம் கேட்டபோது, “சுமித்ராவும் தானும் உல்லாசமாக இருக்கும்போது அடிக்கடி குழந்தை அழுது தொந்தரவு செய்ததால் குழந்தையை கொன்றுவிடும்படி சுமித்ரா கூறியதாகவும், அதன் பேரில் குழந்தையை வாயை பொத்தி கொன்று, இறந்த உடலை படம் எடுத்து சுமித்ராவுக்கு வாட்ஸ் அப் -ல் மெசேஜ் -ம் அனுப்பியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்” அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சுரேஷ் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய கெலமங்கலம் போலீசார் இந்த வழக்கில் சுரேஷ் மனைவி பாரதி மற்றும் சுமித்ரா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் நாளை கிருஷ்ணகிரியில் இருந்து வரும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.