minor girl harassment case 
க்ரைம்

“நீ எனக்கு வேணும்..” 17 வயது மாணவியிடம் அத்துமீறிய பயிற்றுவிப்பாளர்! NEET சென்டரில் நடந்த பதறவைக்கும் சம்பவம்!

வகுப்பறையில் தனியாகப் படித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது ​​பயிற்றுவிப்பாளர் அந்த மாணவியை தவறாக அணுகியுள்ளார்.

Vinvizhi Leninton

மும்பையில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்த 17 வயது மும்பை மாணவியை, பாலியல் ரீதியாகத் தாக்கி, துன்புறுத்தியுள்ளார் நீட் சென்டரின் ஆசிரியர். இதனையடுத்து, 33 வயது தனியார் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஷாஹு நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, கடந்த ஜூன் மாதம் அந்தப் பெண் தனது பயிற்சி மையத்தில் உள்ள வகுப்பறையில் தனியாகப் படித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது ​​பயிற்றுவிப்பாளர் அந்த மாணவியை தவறாக அணுகியுள்ளார். அப்போதுதான் இந்த பாலியல் துன்புறுத்தல் தொடங்கியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் மாணவியிடம் அவரது காதல் உறவை வலுக்கட்டாயமாக திணிக்க முயன்றதாகவும், திருமணம் செய்துகொள்ள முன்மொழிந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் அப்பெண்ணின் கையைப் பிடித்து தகாத முறையிலும் நடந்துள்ளார். அந்த சமயத்தில் அப்பெண் மிகவும் பயந்துபோய் அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்ததாகவும், இந்த மாதம் மாணவி பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றிருந்தபோது, ​​பயிற்றுவிப்பாளர் மீண்டும் அவரிடம் உடல்ரீதியாக நெருங்க முயன்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகக் கூறப்படும் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தலை சமாளிக்க முடியாமல், அந்த 17 வயது சிறுமி இறுதியில், நடந்த சம்பவங்களைப் பற்றித் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவரது குடும்பத்தினர் ஷாஹு நகர் காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். பின்னர் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் விதிகளின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வழக்கு குறித்த உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்