கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக 31 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த அவர், அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்தில் தனியாகச் சென்ற பெண்ணைத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த (நவ 11) ஆம் தேதி நாகர்கோவிலுக்கு வந்த பயணிகள் ரயிலில் ஹேண்ட் பிரேக் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பராமரிப்புப் பணிகளுக்காக அந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகு பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாகர்கோவிலில் இருந்து கோட்டயத்திற்கு ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, இருக்கைக்கு அடியில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணுக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவில், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அவரது இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தினர். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளியைக் கண்டறிய நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
குறிப்பாக, கடந்த 11-ம் தேதி முதல் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த 14-ம் தேதி காலை சுமார் 8 மணியளவில், சம்பவம் நடந்த மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் இருந்து வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த நபர் ஒருவர் வெளியேறுவது பதிவாகியிருந்தது. மேலும், சம்பவத்தன்று அதிகாலை 5-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்றதையும் போலீசார் கண்டறிந்தனர்.
இந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்ட போலீசார், கொலையில் தொடர்புடைய நபரை அடையாளம் கண்டனர். அவர் கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜான்சனின் மகன் ஐயப்பன் (31) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஐயப்பனைப் பிடித்த ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ரயில் நிலையத்தில் தனியாகச் சென்ற பெண்ணைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்து, தாக்கியதாகவும், கைகளால் குத்தியும் காலால் மிதித்தும் காயப்படுத்தியதாகவும், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, பெண்ணின் சடலத்தை ரயில் பெட்டிக்குள் இருக்கைக்குக் கீழே மறைத்து வைத்துவிட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஐயப்பனைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.