க்ரைம்

நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண் சடலம்... சக ஊழியரின் கொடூர செயல்! 5 நாட்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்?

பொன் நகர் பகுதியில் சாலையோரம் முட்புதர் அருகே பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது

Muthu Lakshmi

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே 26 வயது பெண் செவிலியர் உத்திரா கொலை செய்யப்பட்ட வழக்கில், மருத்துவமனையில் உடன் பணியாற்றி வந்த ஆண் செவிலியர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மனைவி உத்திரா (26). இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது. நர்சிங் படித்துள்ள உத்திரா கடந்த (அக் 3) ஆம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியில் சேர்ந்துள்ளார். இதற்காக இருவரும் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த (அக் 14) ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற உத்திரா, பணியை முடித்துவிட்டு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் ரஞ்சித் குமார், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்திராவைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம்–பெருந்துறை சாலையில் உள்ள பொன் நகர் பகுதியில் சாலையோரம் முட்புதர் அருகே பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சடலமாக கிடந்தது காணாமல் போன செவிலியர் உத்திரா என்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் நிர்வாண நிலையில் அழுகிய சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, உத்திராவின் மரணம் தொடர்பாக பெருந்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளைக் கண்டறிய தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. உத்திராவின் மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

இந்தச் சூழலில், உத்திரா பணியாற்றிய அதே மருத்துவமனையில் உடன் பணியாற்றி வந்த ஆண் செவிலியர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உத்திரா அணிந்திருந்த நான்கு பவுன் தாலிக்கொடியை அபகரிக்கும் நோக்கில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இளம் பெண் செவிலியர் கொலை வழக்கில் அவருடன் பணியாற்றிய சக ஊழியரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.