க்ரைம்

“சிறுமியை கிண்டல் செய்த கல்லூரி மாணவன்” - கழுத்தறுத்து கொலை செய்த பெண்ணின் அண்ணன்கள்.. கொலை வழக்கில் 17 வயது சிறுவர்கள் கைது!

ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன் தனது நண்பனின் உதவியுடன் மனோவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு..

Mahalakshmi Somasundaram

நாமக்கல் மாவட்டம் , கொண்டிசெட்டிபட்டி உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் 19 வயதான மனோ. இவர் நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ் சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த மாதம்(ஆக 29) ஆம் தேதி முல்லை நகரில் உள்ள மண் சாலையில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் மனோவினை கொலை செய்தது தெரியவந்தது இந்நிலையில் சிறுவர்கள் உட்பட கொலைக்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவர் கிரிவாசன் மற்றும் திவாகர் ஆகிய 4 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்து சிறுவர்கள் இருவரையும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும், திவாகர், கிரிவாசன் ஆகிய இருவரையும் சேலம் சிறையிலும் அடைத்தனர்.

மேலும் கொலை குறித்து நாமக்கல் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்த இரண்டு சிறுவர்களில் ஒருவரின் 15 வயது தங்கையை கொலை செய்யப்பட்ட மனோ கேலி, கிண்டல் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன் தனது நண்பனின் உதவியுடன் மனோவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த முன் பகையை மனதில் வைத்து சிறுவர்கள் மனோவை கொலை செய்தது தெரியவந்துள்ளது

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் உயிரிழந்த கல்லூரி மாணவர் மனோ குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருச்சக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள் இருவர் ஒரு வீட்டிற்குள் சென்று அங்கிருந்த மனோவை அடித்து இழுத்து வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் வீடியோ காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மனோவை அடித்து தூக்கி செல்லும் போது அருகிருந்தவர்களும் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.