க்ரைம்

சென்னை ஏ.டி.எம்.களில் மர்ம நபர்கள் கைவரிசை... அதிர்ச்சியில் வங்கிகள் அதிகாரிகள்...

Malaimurasu Seithigal TV
சென்னையில் உள்ள ராமாபுரம், விருகம்பாக்கம், தரமணி, வேளச்சேரி என பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம் களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி லட்சக்கணக்கில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ளது எஸ்பிஐ ஏடிஎம் மையம். இந்த ஏடிஎம் மையத்தில் பண இருப்பை சரிபார்த்த போது, ஒன்றரை லட்ச ரூபாய் பணம் மாயமாகியிப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தனர்.
அப்போது  கடந்த 17ம்  தேதி மாலை ஏடிஎம்மிற்கு வந்த மர்ம நபர்கள் கார்டை பயன்படுத்தி, 15 முறை 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஒன்றரை லட்சம் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.  
தொடர்ந்து ஆய்வு செய்ததில் பணம் டெபாசிட் மற்றும் எடுக்கும் வசதி கொண்ட மெஷினில் உள்ள தொழில்நுட்பக் கோளாறை பயன்படுத்தி திருடியது தெரியவந்தது. இந்த மெஷினில் ஏடிஎம்  கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் போது, அதன் "ஷட்டர்" மூடாதபடி 20 நொடிகள் வரை கையில் பிடித்துக் கொண்டால் அந்த பணம் உள்ளே சென்றது போலவும் வாடிக்கையாளர் கணக்கிற்கு மீண்டும் திரும்ப சென்றது போலவும் காட்டிவிடுவதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் விருகம்பாக்கம் சின்மையா நகர், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில்  இதே பாணியில் 8 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வரை கொள்ளையடித்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.