க்ரைம்

திருமணமான இரண்டா நாளே உயிரிழந்த புதுமாப்பிள்ளை!! கோவையில் சோகம்

காதலர் தினத்தில் திருமணம் செய்துக்கொண்ட புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் கார் - லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் கோயம்புத்தூரில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பிரசாத். இவருக்கும் சுவாதி என்ற பெண்ணுக்கும் காதலர் தினமான நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், இன்று காலை புதுமண தம்பதியான ஷியாம் பிரசாத், அவரது மனைவி சுவாதி, தந்தை சவுடையன் மற்றும் தாய் மஞ்சுளா ஆகிய 4 பேரும் காரில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். சரியாக சுந்தராபுரம் சிட்கோ பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் கார் சுக்கு சுக்காக நொறுங்கி அதன் இடிபாடுகளுக்குள் காரில் இருந்த  4 பேரும் சிக்கி கொண்டனர். 

பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,  பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் புதுமாப்பிள்ளையான ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார். இருப்பினும் படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாய் மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, பலத்த காயமடைந்த மாமனார் சவுடையன் மற்றும் அவரது மருமகள் சுவாதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணமான இரண்டே நாளில் புதுமாப்பிள்ளை கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.