க்ரைம்

உதவித் தொகையில் முறைகேடு... அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா??

Malaimurasu Seithigal TV

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடு செய்த ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டக்குடி  வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் கணினி பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றிய  பெண் ஊழியர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை, திருமண உதவித் தொகை ஈமச்சடங்கு உதவி தொகை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து விதமான உதவி தொகைகளிலும்  பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பாமல் வேறு கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் காலத்தில் திட்டக்குடி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆக பணியாற்றிய தற்போது திட்டக்குடி வட்டாட்சியராக பணியாற்றி வந்த  ரவிச்சந்திரன் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த முறைகேட்டில் தற்காலிக பெண் ஊழியர் அகிலா என்பவரை மாவட்ட குற்றவியல் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதையும் படிக்க ||