கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி விருதாம்பாள் என்ற மூதாட்டி தனது காட்டில் விளைவித்த கம்பு பயிரினை பார்ப்பதற்கும், குருவி ஓட்டுவதற்கும் நேற்று மாலை வயலுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பாத விருத்தாம்பாள் மூதாட்டியை அவரது ஐந்து மகள்களும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத மூதாட்டி அவரது கம்பு காட்டிலே சடலமாக கிடந்துள்ளார்.
அப்போது பக்கத்து காட்டை சேர்ந்தவர்கள் இன்று காலை மூதாட்டியை பார்த்தபோது மூதாட்டி விருத்தாம்பாள் தலையில் பலத்த காயமுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். குடும்பத்தினருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவரது உடலை மீட்டனர். அப்போது மூதாட்டி அணிந்திருந்த தாலி, செயின், கொலுசு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் திருடு போயிருப்பதும் நகைக்காக மூதாட்டியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. கொலை செய்த மர்ம நபர்கள் நகையை திருடி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து வரஞ்சரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்கள் நகைக்காகத்தான் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டுக்குச் சென்ற மூதாட்டியை நகைக்காக கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்