Pachmarhi Gang Rape 
க்ரைம்

“காட்டுக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை” - பேருந்துக்காக காத்திருந்த மாணவி.. ஜிப்ஸி டிரைவர் உட்பட 3 பேர் செய்த கொடூரம்!

இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும்...

Mahalakshmi Somasundaram

மத்தியப் பிரதேச மாநிலம், நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபல மலைச் சுற்றுலாத் தலமான பச்மர்ஹியில், 17 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பச்மர்ஹியில் உள்ள பள்ளியில் படித்து வரும் அந்த மாணவி, கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து நிலையத்தில், சுற்றுலாப் பயணிகளுக்காக ஜிப்ஸி வாகனம் ஓட்டும் நபர் ஒருவரை அவர்கள் சந்தித்துள்ளனர்.

அந்த நபர், ஏற்கனவே மாணவியுடன் இருந்த சிறுவனுக்கு அறிமுகமானவர் என கூறப்படுகிறது. அப்போது அந்த ஜிப்ஸி ஓட்டுநருடன் மேலும் 2 பேர் இருந்ததாகவும், அவர்கள் பச்மர்ஹி வனப்பகுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு சென்ற பின்னர், மாணவியின் ஆண் நண்பரை வாகனத்தில் கட்டி வைத்துவிட்டு, மாணவியை 3 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த மாணவி அந்த சம்பவத்திற்குப் பிறகு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த மாணவியின் குடும்பத்தினர் இது குறித்து அவரிடம் விசாரித்த போது (ஆகஸ்ட் 19) ஆம் தேதி பேருந்துக்காக வெயிட் செய்த நிலையில் அங்கு வந்த மூவர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் பச்மர்ஹி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தகவல் கிடைத்த 6 மணி நேரத்திற்குள் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பச்மர்ஹியில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக நர்மதாபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் ராஜன் பேட்டியளித்துள்ளார். சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்