திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர் ராஜகோபால். இவர், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண் ஒருவருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் கடந்த (மே 24) ஆம் தேதி அவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ. ராஜகோபால் மீது அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, குடும்பம் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகப் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்திற்கு வரும் பெண்களிடம் அவர் அநாகரிகமாகப் பேசியதாகவும், அவர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையே, பெண்களுடன் ராஜகோபால் வாட்ஸ்அப் மூலம் மேற்கொண்டதாகக் கூறப்படும் உரையாடல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அந்த உரையாடல்களில், ஒரு பெண்ணிடம், "உனது புடவையுடன் கூடிய புகைப்படத்தை எனக்கு அனுப்பு" என அவர் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்த போது, "உன்னிடம் கேட்காமல் நான் வேறு யாரிடம் கேட்பது?" என ராஜகோபால் பதிலளித்ததாக அந்தச் சாட்களில் இடம்பெற்றுள்ளது. புகார் அளிக்கவும், பாதுகாப்பு கோரியும் காவல் நிலையத்தை நாடும் பெண்களிடம் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரியே இவ்வாறு நடந்துகொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
மேலும், இதே போன்று வேறு பெண்களிடமும் அவர் நடந்துகொண்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மற்ற பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதனால், ராஜகோபால் மீது நிரந்தர பதவி நீக்கம் என்ற நடவடிக்கையுடன் மட்டும் நிறுத்திவிடாமல், அவர் மீதான புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.