Pallavaram Youth Assault Case 
க்ரைம்

“கள்ளகாதலர்களை மிளகாய் பொடி தூவி அடித்த நரிக்குறவர்கள்” - பெங்களூர் சென்று அழைத்து வந்து தாக்குதல்.. போலீஸ் விசாரணை!

போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனக் கருதிய நரிக்குறவர்கள், தாங்களாகவே பவானி மற்றும் டேவிட்டை தேடத் தொடங்கியுள்ளனர்...

Mahalakshmi Somasundaram

சென்னை பல்லாவரத்தில் திருமணமான பெண்ணுடன் சென்றதாகக் கூறப்படும் அவர்களின் இன இளைஞரை, நரிக்குறவர்கள் பஞ்சாயத்து கூட்டி சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மீது மிளகாய்ப்பொடி தூவியும், தண்ணீர் ஊற்றியும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பவானி என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் இவருக்கும் அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் டேவிட் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த நரிக்குறவர்கள் அவர்களை கண்டுபிடித்து தருமாறு பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் பஞ்சாயத்து கூட்டி விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனக் கருதிய நரிக்குறவர்கள், தாங்களாகவே பவானி மற்றும் டேவிட்டை தேடத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக டேவிட்டைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என வாட்ஸ்அப் குழுவிலும் தகவல் பகிர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில், டேவிட் மற்றும் பவானி இருவரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பல்லாவரத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் அங்கு சென்று இருவரையும் பிடித்து பல்லாவரம் நரிக்குறவர் காலனிக்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கு, திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் ஏன் தலையிட்டாய் எனக் கூறி டேவிட்டைப் பலர் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் மீது மிளகாய்ப்பொடி தூவியும், தண்ணீர் ஊற்றியும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. தொடர்ந்து பவானியையும் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்தவர்கள், அதனை பூந்தமல்லியில் உள்ள டேவிட்டின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களையும் பஞ்சாயத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று டேவிட்டை மீட்டுள்ளனர். பின்னர், அவர் தாம்பரத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான பெண்ணுடன் சென்றதாகக் கூறி இளைஞரைப் பஞ்சாயத்து கூட்டி தாக்கிய சம்பவம் பல்லாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.