Panruti sexual harassment case 
க்ரைம்

“அரும்பு தோட்டத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை” - பட்டப்பகலில் நடந்த அத்துமீறல்.. அலறல் சத்தம் கேட்டு ஓடிய மக்கள்!

அதே கிராமத்தைச் சேர்ந்த 60 வயதுடைய தனபால் என்பவரும் அருகில் உள்ள நிலத்தில் அரும்பு பறித்துக் கொண்டிருந்தாக சொல்லப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரும்புத் தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த 58 வயது மூதாட்டியிடம், அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி 58 வயதுடைய ஜெயா. கணவரை இழந்த இவர், தனது மகன்களுடன் வசித்து வருகிறார்.

எனவே அப்பகுதியில் உள்ள அரும்புத் தோட்டங்களில் கூலி வேலை செய்து குடும்பத்திற்குத் தேவையான வருமானத்தை ஈட்டி வருகிறார். தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு முறை அரும்பு பறிக்க செல்வதை ஜெயா வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில், இன்று(நவ 28) காலை வழக்கம்போல் ஜெயா அரும்புத் தோட்டத்தில் பூக்களைப் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த 60 வயதுடைய தனபால் என்பவரும் அருகில் உள்ள நிலத்தில் அரும்பு பறித்துக் கொண்டிருந்தாக சொல்லப்படுகிறது.

அந்த நேரத்தில், தனது மனைவியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச வேண்டும் என்று ஜெயாவின் அருகில் சென்ற தனபால், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயா, அவரிடமிருந்து தப்பிக்க நினைத்து கூச்சலிட்டு உள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், தனபால் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஜெயாவை மீட்டனர். பின்னர், நடந்த சம்பவம் குறித்து அவர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மூதாட்டியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள தனபால் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கூலி வேலைக்குச் சென்ற 58 வயது மூதாட்டியிடம், 60 வயது முதியவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார் தட்டாம்பாளையம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.