Dharmapuri Family Murder 
க்ரைம்

“தாயை வெட்டிக் கொன்ற மகன்” - ஒரே வார்த்தையால் வெடித்த தகராறு… அடுத்தடுத்து நடந்த தாக்குதல்!

சின்மயியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த உமாராணி உடனடியாக அங்கு ஓடி வந்து...

Mahalakshmi Somasundaram

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மனைவி குறித்து மகள் ஆதரவாக பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, மகளை கொடுவாளால் வெட்டியதுடன், தடுக்க வந்த தனது தாயையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் 43 வயதுடைய சுரேஷ். ஓட்டல் தொழிலாளியான இவருக்கு 40 வயதுடைய ஷாலினி என்ற மனைவியும், 19 வயதில் சின்மயி என்ற மகளும் உள்ளனர். சின்மயி தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், சுரேஷுக்கும் அவரது மனைவி ஷாலினிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சுரேஷின் தாய் உமாராணி மற்றும் மகள் சின்மயி ஆகியோர் ஒரு வீட்டிலும், அருகிலேயே சுரேஷ் தனியாக மற்றொரு வீட்டிலும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஷாலினி வெளியூருக்கு கூலி வேலைக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்து வந்துள்ளார். அவ்வப்போது தனது மகள் சின்மயியை சந்திப்பதற்காக மட்டும் ஊருக்கு வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. அப்போது, சுரேஷ் மது அருந்திவிட்டு ஷாலினியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு சின்மயி தனது தந்தை சுரேஷுக்கு உணவு கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஷாலினி குறித்து சுரேஷ் மகளிடம் பேசியதாகவும், அதற்கு சின்மயி தனது தாய்க்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், வீட்டில் இருந்த கொடுவாளால் சின்மயியின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். சின்மயியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த உமாராணி உடனடியாக அங்கு ஓடி வந்து, தனது மகனை தடுத்து நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தனது தாய் உமாராணியையும் கொடுவாளால் கழுத்து, தலை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த உமாராணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதேசமயம், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சின்மயியை அங்கிருந்தவர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏ.பள்ளிப்பட்டி போலீசார், உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். மனைவி குறித்து மகள் ஆதரவாக பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தை, மகளையும் தாயையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிகாரப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்