பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் சொகுசு பேருந்து கவிழ்ந்து கோர விபத்து. பேருந்தில் பயணம் செய்த 16 பேரில் 5 பேருக்கு லேசான காயங்கள். ஒருவர் பலி.
இந்தியா முழுக்க தற்போது பேருந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில், சின்னடேகுர் கிராமம் அருகே நடந்த ஒரு தனியார் சொகுசுப் பேருந்து விபத்து, தேசத்தையே உலுக்கிய ஒரு துயரச் சம்பவமாக அமைந்துள்ளது. இதில் 19 -பேர் தீயில் கருகி இறந்தனர். ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, அதிகாலை நேரத்தில் ஒரு இருசக்கர வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில், இருசக்கர வாகன ஓட்டி மது போதையில் இருந்ததே விபத்துக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டாலும் அடுத்தடுத்த விசாரணையில், பேருந்தின் அடிப்பாகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட மின்னணு சாதனங்கள் தான் காரணம் என கண்டறியப்பட்டது.
இவ்வாறாக இந்தியா முழுமைக்கும் இது போன்று ஏதேனும் ஒரு காரணங்களால் பேருந்து விபத்துகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பெங்களூரில் இருந்து கொடைக்கானல் செல்வதற்காக வந்த சொகுசு பேருந்து அதிகாலை 3 மணிக்கு பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின்விளக்கு கம்பத்தின் மீது மோதி சொகுசு பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 16 பேரில் 5 பேருக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் அதில் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிர் இழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.