திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராஜா, ஜான்சன் ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றனர். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஜான்சன் மாற்று சமுதாய பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், ஆலந்தலை ஊர் தலைவராக இருந்த ராஜாவின் தந்தை ஜான்சனை ஊரைவிட்டு வெளியேற்றியுள்ளார். இதனால், கோபமடைந்த ஜான்சன் இலங்கைக்கு படகு மூலம் ராஜா பீடி இலை, மஞ்சள் போன்ற பொருட்களை கடத்துவதாக போலீசில் தெரிவித்துள்ளார்.
இதனையறிந்து ஆத்திரமடைந்த ராஜா, ஜான்சனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது. கொலை செய்ய திட்டம் தீட்டியது ஜான்சனின் மைத்துனர் மதன்குமாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மதன்குமாரை ராஜா மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்துவதற்காக அழைத்து சென்று அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தப்பியோடிய ராஜா உட்பட சம்பந்தபட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.