க்ரைம்

"போதை ஆசாமி".. என்னோட வாகனத்தையா பறிமுதல் செய்ரிங்க.. ஆத்திரத்தில் "கோஸ்ட் ரைடராக" மாறியதால் பெரும் பரபரப்பு!!

சேலத்தில் மதுபோதையில் சென்றவரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த நபர் அதே பகுதியில் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suaif Arsath

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் வாகன ஓட்டுனர் புத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து சந்தோஷ் குமாரை வீட்டிற்கு செல்லும்படியும், காலையில் காவல்நிலையம் வந்து வாகனத்தை எடுத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் மதுபோதையில் அருகே இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து அதே பகுதியில் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுமார் 80 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் சந்தோஷ் குமார் மதுபோதையில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.