க்ரைம்

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் செய்த காவலர்.. அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கும் ஆறுமுகநேரி காவல் நிலையம்!

சமூக சேவகர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் இதற்கு மேல் இவ்வாறு செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்..

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் அக்னி முத்து. இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். காவல்துறையில் பணியாற்றி வந்த அவர் மீது தற்போது பெண்ணிடம் தகாத முறையில் பேசியதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆறுமுகநேரி அருகே உள்ள காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் குடும்ப பிரச்சனை தொடர்பாக புகார் அளிப்பதற்காக ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது புகார் மனுவை தலைமை காவலர் அக்னி முத்து பெற்றுக்கொண்டு விசாரணைக்காக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புகார் மனுவில் இடம்பெற்றிருந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி, தலைமை காவலர் அக்னிமுத்து அந்த பெண்ணை தனிப்பட்ட முறையில் போன் செய்து “நான் இருக்கேன் பார்த்து கொள்கிறேன்” என பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியதுடன், அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் நிலையத்திற்கு உதவி தேடி வந்த பெண்ணிடம் காவலரே இவ்வாறு நடந்து கொண்டதாக வெளியான தகவல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தலைமை காவலர் அக்னிமுத்துவை காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் இதற்கு மேல் இவ்வாறு செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

இருவரும் பேசிய ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்த நிலையில், சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றது. எனவே சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அக்னி முத்துவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், பெண் புகார்தாரரிடம் தகாத முறையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் அக்னிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த மாதமும் இதே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் திலீபன், பெண் காவலருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து ஒரே காவல் நிலையத்தில் பெண் தொடர்பான புகார்களின் அடிப்படையில் இரு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது மாவட்டம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.