க்ரைம்

இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர்!! தப்பிக்க முயன்ற போது நடந்த விபரீதம்!!

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tamil Selvi Selvakumar

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 30ஆம் தேதி தனது பணியை முடித்துவிட்டு ஆயிரம் விளக்கு  வேலஸ் கார்டன் 3-வது சந்திப்பு அருகே நடந்து சென்றதாகவும், அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் பயந்து கூச்சலிட்ட போது தன்னை தகாத வார்த்தையால் திட்டி, போலீசிடம் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். 

பின்னர் அந்த நபர் வேகமாக சென்ற போது காரில் மோதியதில் விபத்து ஏற்பட்டு காயத்துடனே தப்பி சென்றுவிட்டதாகவும்  புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு போலீசார் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரின் இருசக்கர வாகன எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் திருவொற்றியூர் காவல் நிலைய காவலர் வனராஜா பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் காவலரை கைது செய்து விசாரணை நடத்திய போது, புதுப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்த வனராஜா, அன்றிரவு புதுப்பேட்டையில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியதாகவும், குடிபோதையில் வீட்டிற்கு செல்லும் போது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. 

காவலர் வனராஜா மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், முறையற்று தடுத்தல், பாலியல் தொல்லை மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.