சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரில், வேலை தொடர்பாக ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்தி பி.ஆர். சுந்தர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்தப் பெண் செய்தி வாசிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தன்னை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 3 மணி நேரம் வெளியே செல்ல முடியாத வகையில் அடைத்து வைத்து மிரட்டியதாகவும், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அச்சுறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் புகாரின் அடிப்படையில் ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மனைவி மீதும் புகார்
இந்த விவகாரத்தில் பி.ஆர். சுந்தரின் மனைவி மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பி.ஆர். சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பி.ஆர். சுந்தர்?
பி.ஆர். சுந்தர் பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகராகவும், டிரேடராகவும் அறியப்பட்டவர். யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் முதலீடு தொடர்பான நிகழ்ச்சிகள் வாயிலாக பங்குச்சந்தை முதலீடு, வர்த்தகம் குறித்து தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். இதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமடைந்த அவர், பல்வேறு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதலீடு தொடர்பான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்ட பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதும், அவரது மனைவி மீதும் புகார் அளிக்கப்பட்டிருப்பதும் இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. எனினும், இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதால், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளாக மட்டுமே கருதப்பட வேண்டும். போலீஸ் விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.