திருவனந்தபுரம், நீண்டகராவைச் சேர்ந்த 24 வயதான புதுமணப்பெண் ஒருவர், வரதட்சணைக் கொடுமையால் தனது கணவரும் அவரது குடும்பத்தினரால் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னத்தாராவைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், தற்போது கொல்லம் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சாவரா போலீசார் அவரது கணவர் நந்து மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அஞ்சுவுக்கும் நந்துவுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி ஒரு வாரத்திலேயே, தான் கொண்டு வந்த வரதட்சணை போதுமானதாக இல்லை என்று கணவரின் குடும்பத்தினர் சொல்ல தொடங்கியதன் மூலம் துன்புறுத்தல் தொடங்கியதாக அஞ்சு குற்றம் சாட்டியுள்ளார். திருமணம் முடிந்து சுமார் ஒரு மாதம் கழித்து, நந்து சவுதி அரேபியாவுக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அஞ்சுவையும் அவரோடு அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அஞ்சுவின் கூற்றுப்படி, அவர்கள் சவுதி அரேபியாவை அடைந்த பிறகு அவர் மீதான துன்புறுத்தல் இன்னும் தீவிரமடைந்துள்ளது.
அங்கு அவரது கணவர், பிரஷர் குக்கர், கல் மற்றும் லேப்டாப் சார்ஜர் கேபிள்கள் உள்ளிட்ட வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி தன்னை அடிக்கடி தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரஷர் குக்கரால் தாக்கப்பட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நந்து தன்னை வயிற்றில் உதைத்ததாகவும், தனது அந்தரங்க உறுப்புகளில் கொடூரமாகத் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ச்சியான தாக்குதல்களால் ஏற்பட்டதாகக் கூறிய அப்பெண்ணின் உடலில் பல காயத் தழும்புகள் இருந்துள்ளது. உடல்ரீதியான துன்புறுத்தலைத் தவிர, கடுமையான மனரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளானதாக அஞ்சு குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நந்து தன்னை கத்தியால் மிரட்டியதாகவும், தன்னைப்பற்றி இழிவான கருத்துக்களைக் கொண்ட குரல் செய்திகளைப் பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
அதில், திருமணத்திற்கு முன்பு பலருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அந்த வீடியோக்கள் ஒரு ஆபாச இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாக கூறுமாறு அவர் மிரட்டப்பட்டதோடு, நந்துவை விவாகரத்து செய்த பிறகு, பாலியல் தொழிலில் ஈடுபட விரும்புவதாகக் கூறும் ஒரு வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கூறப்படும் துன்புறுத்தலைத் தொடர்ந்து தான் கேரளாவிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டதாகவும், அதன் பின்னர் மருத்துவ சிகிச்சை பெறவும் காவல்துறையை அணுகவும் முடிந்ததாகவும் அஞ்சு தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் காவல்துறையினர் தன்னிடம் வாக்குமூலம் பெற்றபோது, தாக்குதல் குறித்த விவரங்கள், குறிப்பாக தனது வயிறு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் நடந்த தாக்குதல்கள், முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், காவல்துறை இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்