உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில், துறவி பிரேமானந்த் மகாராஜிடம் தீட்சை பெற்ற 25 வயது இளம் துறவி, ஆசிரமத்தின் நான்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறையில் ரத்தக்கறை படிந்த அரைக்கும் கருவி (கிரைண்டர்) மற்றும் டைரி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டிருந்தது வழக்கில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிருந்தாவனத்தின் வராக் காட் பகுதியில் துறவி பிரேமானந்த் மகாராஜின் கேலிகுஞ்ச் ஆசிரமம் அமைந்துள்ளது. இதன் அருகே, பிரேமானந்த் மகாராஜிடம் தீட்சை பெற்ற சீடர்கள் மட்டுமே வசிக்கும் குரு கிருபா குஞ்ச் என்ற நான்கு மாடிக் கட்டிடம் உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஜபல்பூரைச் சேர்ந்த தீபக் என்ற ரசிக் துலாரி ஷரன் (25), அந்த ஆசிரமத்தின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சர்வோதயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரசிக் துலாரி ஷரன் உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரசிக் துலாரி ஷரன் சுமார் இரண்டு ஆண்டுகளாக பிரேமானந்த் மகாராஜின் பரிவாரத்தில் இருந்ததும், அவரிடம் தீட்சை பெற்ற பின்னர் பரா காட் பகுதியில் உள்ள ராதா வட்டிகா அருகே அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அறையில் ரத்தக்கறை படிந்த அரைக்கும் கருவி
ரசிக் துலாரி ஷரன் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டபோது, ஒரு டைரி மற்றும் ரத்தக்கறை படிந்த அரைக்கும் கருவி கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கருவி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு யாரேனும் அவருக்கு காயம் ஏற்படுத்தி விட்டு பின்னர் அவர் கட்டிடத்தில் இருந்து தள்ளிவிட்டனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து ரசிக் துலாரி ஷரன் கீழே குதித்தது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம், அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கட்டிடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்