க்ரைம்

மோசடி வழக்கு: தயாரிப்பாளருக்கு  நிபந்தனை ஜாமீன்!!

Malaimurasu Seithigal TV

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை  திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானார். இவர், தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அதில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தத் திட்டத்தில்  முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளை கூறி தன்னை  திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், செப்டம்பர் 7ம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்தர் சந்திரசேகர்  ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ரவீந்தர் தரப்பில் புகாதாரருக்கு இரண்டு கோடி ரூபாய் அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

புகார்தாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ரவீந்தர் இரண்டு கோடி தந்துவிட்டதாக கூறுவது தவறு எனவும், தற்போது வரை 16கோடி ரூபாயை தரவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, இரண்டு கோடி ரூபாய் வழங்கியதாக கூறப்படும் ஆவணங்களை காவல்துறை சரிபார்த்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவீந்திரன் வங்கி கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் இவை அனைத்தும் இந்த வழக்கு தொடர்புடையதா? என தெரியவில்லை என கூறினார். 

இதனையடுத்து, பண பரிவர்த்தனை தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே அது குறித்து தெரியவரும் என குறிப்பிட்ட நீதிபதி இரண்டு வாரங்களில் ஐந்து கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த ரவீந்தர்க்கு உத்தரவிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.