க்ரைம்

அமைச்சர் எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை!

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தங்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக  அமைச்சர் எ.வ. வேலு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அமைச்சர் மற்றும் அவக்கு தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் காலை சோதனையை தொடங்கிய நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் வேலு நகரில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி, கரண் மகளிர் கல்லூரி என பொதுப்பணித்துறை அமைச்சருக்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 120க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக துப்பாக்கி ஏந்தி மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள்  பாதுகாப்பு பணயில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் அமைச்சரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுழற்சி முறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் முக்கியமான இடங்களில்  கட்டு கட்டாக முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியானதால் வருமான வரித்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்