பெங்களூருவில் தங்க கடத்தலுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கை ஒன்று அரேங்கேறியுள்ளது. ஆம்! கன்னட நடிகை ரன்யா ராவ், கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் திங்கள் இரவு (மார்ச் 3, 2025) பெங்களூரு வந்த இவர், அடிக்கடி சர்வதேச பயணம் மேற்கொண்டதால் DRI-யின் கண்காணிப்பில் இருந்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, ரன்யா தங்கத்தை மிகவும் சாமர்த்தியமாக அணிந்திருந்ததோடு, தங்கக் கட்டிகளை தனது ஆடைகளிலும் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரன்யா ராவ், கர்நாடகாவில் DGP பதவியில் உள்ள ஒரு மூத்த IPS அதிகாரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், தான் DGP-யின் மகள் என்று கூறி உள்ளூர் காவல்துறையினரை அழைத்து தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உதவி கோருவது இவரது வழக்கமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், சட்ட அமலாக்க அதிகாரிகளிடமிருந்து ஏதேனும் ஆதரவு அவருக்கு கிடைத்ததா என்பது குறித்து DRI விசாரணை நடத்தி வருகிறது.
ரன்யாவின் சினிமா கேரியர்
ரன்யா, கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புடன் ‘மாணிக்கியா’ என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். இது தவிர, பிற தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 31 வயதான இவர், கர்நாடகாவின் சிக்மகலூரைச் சேர்ந்தவர். பெங்களூருவில் உள்ள தயானந்த சாகர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்த பிறகு, திரைத்துறையில் நுழைந்தார். 2014-ம் ஆண்டு ‘மாணிக்கியா’ படத்தில் அறிமுகமானார். பின்னர், 2016-ல் தமிழ் திரைப்படமான ‘வாகா’வில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். 2017-ல் ‘படாகி’ என்ற கன்னட படத்தில் கணேஷுடன் இணைந்து நடித்தார்.
ரன்யாவின் அடிக்கடி துபாய் பயணங்கள் DRI-யின் சந்தேகத்தை ஏற்படுத்தின. கடந்த 15 நாட்களில் நான்கு முறை துபாய் சென்று திரும்பியது, அவரை குறிவைத்து நடவடிக்கை எடுக்க வழிவகுத்தது. திங்கள் இரவு அவர் விமானத்தில் இருந்து இறங்கியவுடன், DRI அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது, 14 கிலோ தங்கக் கட்டிகள் ஒரு பெல்ட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், 800 கிராம் தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, DRI தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை (மார்ச் 4, 2025) அவர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
வீட்டில் சோதனை: ரன்யாவின் கைதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள அவரது லாவெல் சாலையிலுள்ள ஆடம்பர வீட்டில் DRI அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு, 2.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 2.67 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக இந்த வழக்கில் 17.29 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
DGP-யின் பதில்: ரன்யாவின் தந்தை கே. ராமச்சந்திர ராவ், தனது மகளின் செயல்களில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். “அவள் தவறு செய்திருந்தால், சட்டம் தன் கடமையை செய்யும்,” என்றும் அவர் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.
ரன்யாவின் குடும்பம் ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. 2014-ல், அவரது தந்தை தெற்கு மண்டல IGP-யாக இருந்தபோது, மைசூரில் ஒரு தங்க வியாபாரியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பணத்தில் 20 லட்சம் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது CID விசாரணைக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது
ரன்யா ராவின் கைது, திரையுலகிலும் சட்ட அமலாக்கத் துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான விசாரணை முடிவு, இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்