க்ரைம்

இரு சக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை.. பட்டப்பகலில் அம்பத்தூர் மேம்பாலத்தில் நிகழ்ந்த பயங்கரம்

சென்னை அம்பத்தூர் அருகே  பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை அரிவாளால் வெட்டி அவரிடமிருந்து 82 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Suaif Arsath

சுரேன் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனத்துக்கு சொந்தமான 82 லட்ச ரூபாயுடன் விஜயகுமார் என்ற ஊழியர் இன்று பிற்பகல் இரண்டு மணி அளவில் வானகரத்தில் இருந்து மாதவரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை  அருகே 200 அடி பைபாஸ் சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், விஜயகுமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு பணத்தை பறித்துச் சென்றது.

தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயகுமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள மேம்பாலத்தில் நடைபெற்ற இந்த அரிவாள் வெட்டு கொள்ளைச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.