சேலம் மாவட்டம் பனமரத்து பட்டியைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி, தேர்வுக்காக கடந்த நான்கு மாதங்களாக கருப்பூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது அவரது அக்காவின் போனில் இன்ஸ்டாகிராமை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி இருக்கிறார்.
அப்போது சென்னை ஜி.என்.டி ரோடு பகுதியை சேர்ந்த, லேப் டெக்னீஷியனான 22 வயது இளைஞர் கிஷோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பில் மாணவி ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொண்டு, ஆசை வார்த்தைகளையும், கல்லூரி படிக்க வைப்பேன் என்ற போலியான நம்பிக்கையையும் கூறி, மாணவியை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் கிஷோர்.
பின்னர் இருவரும் தினந்தோறும் வாட்ஸ் அப் மூலம், வீடியோ கால் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்போது மாணவியை கட்டாயப்படுத்தி அந்தரங்க வீடியோக்களை வாங்கிய கிஷோர் அந்த வீடியோக்களை வைத்து மாணவியை மிரட்டி வந்துள்ளார்.மேலும் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் தனது நண்பரான முகமது அலிக்கும் மாணவியின் அந்தரங்க வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
பிறகு கிஷோரும், முகமது அலியும் சேர்ந்து மாணவியை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த நிலையில்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் சென்ற இருவரும் மாணவிக்கு கால் செய்து. “நாங்கள் இருவரும் சேலம் வந்திருக்கிறோம். ஏற்காடு செல்ல போகிறோம், நீயும் வா.. வரவில்லை என்றால் உனது வீடியோக்களை வெளியிட்டுவிடுவோம்” என கூறி மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்த சிறுமி நடந்ததை, தனது அக்காவிடமும் பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் இது குறித்து போலீசிடம் தகவல் தெரிவித்துள்ளனர், இருவரையும் வசமாக பிடிக்க எண்ணிய காவல்துறை மாணவியின் செல்போனை, கைப்பற்றி இருவரிடமும் மாணவி போல மெசேஜ் செய்து. அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று ஒரு காவலரை மாணவியின் உடை அணிய வைத்து நிற்க சொல்லியுள்ளனர்.
இதனை நம்பி மாணவியை பார்க்க வந்த கிஷோரையும், முகமது அலியையும் காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.