சேலம் மாவட்டம், இடங்கணசாலை அடுத்துள்ள கோனேரிபட்டி பகுதியை சேர்ந்தவர் 45 வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்று 23 வயதில் ஆகாஷ் என்ற மகன் உள்ள நிலையில் பழனிச்சாமி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார். இதனால் ஜெயந்தி தனது கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனிச்சாமி ஜெயலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அப்போது ஜெயலட்சுமியின் முதல் கணவனின் மகளான கனக வள்ளிக்கும் ஆகாஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இதனை அறிந்த பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி தனது மகன் மற்றும் மகளை கண்டித்துள்ளனர். ஆனாலும் தங்களது காதலை கைவிட மறுத்த ஆகாஷ் மற்றும் கனகவள்ளி தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரையும் கடுமையான வார்த்தைகள் பேசி பழனிசாமியும் ஜெயலட்சுமியும் கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் மற்றும் கனகவள்ளி பழனிசாமியையும் ஜெயலட்சுமியையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த (ஆக 16) ஆம் தேதி இரவு ஆகாஷ் தனது தந்தை பழனிச்சாமி மற்றும் ஜெயலட்சுமியை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் அவர்களின் உடல், தலை, கை, கால்கள் ஆகியவற்றை தனித் தனியே வெட்டி பழனிச்சாமியின் கை,கால்கள், தலை போன்றவற்றை ஒரு சாக்கு மூட்டையிலும், அதே போல ஜெயலட்சுமியின் கை, கால்கள், தலை போன்றவற்றை வேறொரு சாக்கு மூட்டையிலும், இருவரது உடலையும் மற்றொரு சாக்கு மூட்டையிலும் என மூன்று சாக்கு மூட்டைகளில் இருவரின் உடலையும் கட்டியுள்ளார்.
பின்னர் கைகால்கள் தலை உள்ள இரண்டு சாக்கு மூட்டைகளை தாழையூர் ஏரியிலும், முண்டம் இருக்கும் சாக்கு மூட்டையை ஏகாபுரம் ஏரியிலும் தூக்கி வீசிவிட்டு வீட்டிற்கு சென்ற ஆகாஷ் தனது தந்தையை காணவில்லை என நாடகமாடியுள்ளார்.எனவே உறவினர்கள் பழனிசாமியை பல்வேறு பகுதியில் தேடியுள்ளனர். பழனிச்சாமி எங்கும் கிடைக்காத நிலையில் அவரது உறவினர்கள் ஆகாஷை மிரட்டி பழனிச்சாமி குறித்து விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் மறைக்க முடியாமல் ஆகாஷை பழனிச்சாமி மற்றும் ஜெயலட்சுமியை கொலை செய்ததை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் விரைந்து வந்து ஆகாஷை கைது செய்த போலீசார், ஆகாஷின் தகவல்களை வைத்து பழனிச்சாமி மற்றும் ஜெயலட்சுமியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஆகாஷ் மீதும் கனகவள்ளி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.