க்ரைம்

ஊராட்சி மன்றத் தலைவருக்கு அலுவலகத்திலேயே அரிவாள் வெட்டு... 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு...

ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  பணியாற்றிக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு சராமரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகிப்பவர் யுவராஜ் (38). இவர் இன்று காலை 11 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அதே அறையில் அவரது அருகே ஊராட்சி செயலாளர் வினோத் 22 என்பவர் அமர்ந்து கணினியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். இதிலிருந்து 3 பேர் மட்டும் இறங்கி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு உள்ளே சென்று அலுவலகத்தில் தனது அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஊராட்சிமன்ற தலைவர் யுவராஜிடம் வீட்டு வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் நீங்கள் யார் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலை, கழுத்து, தொடை உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி செயலாளர் வினோத் என்பவர் சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

ஊராட்சிமன்றத் தலைவர் கீழே சாய்ந்ததும் அவர் இறந்து விட்டார் என்ற எண்ணத்தில் கத்தியால் வெட்டிய 3 பேரும் ஓடிச் சென்று அங்கு தயாராக இருந்த 2 மோட்டார் சைக்கில்களில் ஏறி தப்பி  விட்டனர். இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யுவராஜை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொண்டு வந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி  தலைமையில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து மப்பேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்ட 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தேர்தல் விரோதத்தால் வெட்டப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது விரோதம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.