அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மனநல மற்றும் போதைப்பொருள் பழக்க சிகிச்சை மையத்தில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளியுடன் ரகசியமாக பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அந்த நோயாளியை சிகிச்சை மையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்வதற்காக பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி பெற்றதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 32 வயதான மிஷெல் லுச்சாவ்-ரெபோரா என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோம்ஸ்டெட்டில் செயல்பட்டு வரும் நியூ ஹோப் கார்ப்ஸ் என்ற மனநல மற்றும் போதைப்பொருள் சிகிச்சை மையத்தில் இவர் பயிற்சி பணியாளராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. நீதிமன்ற ஆவணங்களின்படி, 42 வயதான ஆண் நோயாளியுடன் அவர் சுமார் மூன்று மாதங்களுக்கு ரகசிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிகிச்சை நேரங்களின் போது இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நோயாளி சிகிச்சை மையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அவரை வெளியே அழைத்துச் செல்வதற்காக லுச்சாவ்-ரெபோரா பொய்யான காரணங்களை கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் நோயாளி சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே சென்று இருவரும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, இருவருக்கும் இடையேயான சந்திப்புகள் ஒரே இடத்தில் மட்டும் நடைபெறவில்லை. லுச்சாவ்-ரெபோராவின் பைன்கிரெஸ்ட் வீட்டிலும், கீ பிஸ்கேனில் உள்ள அவரது தாயின் வீட்டிலும், மியாமியில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையிலும் அவர்கள் சந்தித்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த உறவு குறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்” என லுச்சாவ்-ரெபோரா அந்த நோயாளியிடம் கூறியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால், எதிர்காலத்தில் மருத்துவராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு பாதிக்கப்படும் என்று அவர் கூறியதாகவும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த வருடத்தில் இருவருக்கும் இடையேயான உறவு முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த நோயாளி, லுச்சாவ்-ரெபோராவுக்கு எதிராக நிறுவன அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். புகார் கிடைத்ததும் நியூ ஹோப் கார்ப்ஸ் நிர்வாகம் இந்த விவகாரத்தை சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், அவரின் பயிற்சியையும் உடனடியாக நிறுத்தியதாக அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் லுச்சாவ்-ரெபோரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் 5,000 அமெரிக்க டாலர் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் அந்த பெண்.
நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் வழக்கு தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறியதுடன், தன்னை தனியாக விடுமாறும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை, லுச்சாவ்-ரெபோரா குற்றம்சாட்டப்பட்டவராகவே கருதப்படுகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.