பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் நடந்து வரும் நிலையில் நேற்று அதிகாலை சென்னை அடையாறு பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்த தூய்மைப்பணியாளரான 50 வயதுடைய பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். அதிகாலை அவர் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த 25 வயதுடைய வாலிபர் வண்டியை நிறுத்திவிட்டு நோட்டமிட்டுள்ளார். பின்னர் அவர் அந்த பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும் என நகர்ந்து செல்ல கூறியுள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் அருகில் சென்ற வாலிபர் மிகுந்த ஆபாசமான செய்கைகளை செய்து அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர், அவர் சுத்தம் செய்ய கைகளில் வைத்திருந்த துடைப்பத்தை பயன்படுத்தி வாலிபரை சரமாரியாக தாக்கிய நிலையில் அந்த வாலிபர் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றார். இந்த சம்பவங்கள் அங்கு நின்றிருந்த காரில் உள்ள சிசிடிவியில் பதிவான நிலையில் அதனை ஆதாரமாக வைத்து தூய்மை பணியாளர் காவல் துறையில் புகாரளித்தார்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த இருசக்கர வாகனத்தின் பதிவெண் வைத்து விசாரணையை தொடங்கிய போலீசார் அந்த வாகனம் கர்நாடகாவில் பதிவுசெய்யப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். மேலும் அந்த வாலிபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாய் தேஜா என்பதும் பெருங்களத்தூரில் தங்கி போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.மேலும் அவர் இதே போல பலமுறை தனியாக இருக்கும் பெண்களிடம் தவறான முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் “இது போல என்னுடன் வேலை பார்க்கும் சக பணியாளர்களுக்கு பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது ஆனால் அதை வெளியில் யாரும் சொல்லவில்லை. இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது இவ்வாறு செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் பணி செய்யும் போது எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்ய வேண்டும்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.