க்ரைம்

'கழுத்தறுத்து கொல்லப்பட்ட கள்ளக்காதலி'! தாயின் தகாத உறவால் பரிதவிக்கும் 3 பிள்ளைகள்

கணவன் இறந்த நிலையில் வேறு ஒருவருடன் ஏற்பட்ட கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்.

Vinvizhi Leninton

பெரம்பலூர், பாரதிதாசன் 4வது குறுக்கு தெரு பகுதியில் வசிப்பவர் புவனேந்திரன் (63). இவருக்கு சொந்தமான மாடியில் உள்ள 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அரியலூர் மாவட்டம், புது வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண், புவனேந்திரனின் வீட்டில் 2 மாடியில் வாடகைக்கு வந்து குடியிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பச்சமுத்து என்பவருக்கும் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது இருவருக்குமிடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று (10ம் தேதி ) பச்சமுத்து என்பவர், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற நந்தினியை கொலை செய்து விட்டதாக தெரிவித்து போலீசாரிடம் சரணடைந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு நந்தினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் தடயவியல் கைரேகை நிபுணர்களை வரவழைத்து, பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, இறந்த நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர தொடங்கியது. நந்தினிக்கு பெரியசாமி என்பவருடன் ஏற்கனவே திருமணம் நடந்து அவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளது தெரியவந்தது. மேலும், நந்தினியின் கணவர் பெரியசாமி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள பச்சமுத்து உடன் நந்தினிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு நந்தினிக்கும் பச்சமுத்துக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பச்சமுத்து நந்தினியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவருக்குள்ளும் நடந்த சண்டை எதற்காக என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தவறான பழக்கத்தால் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு இறுதியாக கொலையில் முடிந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.