இசக்கியப்பன்  இசக்கியப்பன்
க்ரைம்

"விஜய்க்காக தீக்குளித்தவர் உயிரிழப்பு!" தவெக ஆட்சியமைக்க தாமதமானதால் விபரீதம்

விஜய் முதலமைச்சராக பதவியேற்க முடியாமல் போய்விடுமோ? என்ற மனவேதனையில் மூன்று நாட்களுக்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி.

Vinvizhi Leninton

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் மனமுடைந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான அரசியல் இழுபறி காரணமாக, கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலர் கவலையடைந்திருந்தனர். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கியப்பன் (47), விஜய் முதலமைச்சராக பதவியேற்க முடியாமல் போய்விடுமோ? என்ற மனவேதனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இசக்கியப்பன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தற்போது முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தனது விருப்பம் நிறைவேறியதை அறியாமலேயே இசக்கியப்பன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், தமிழக வெற்றி கழக ஆதரவாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.